புதுச்சேரி

புதுவை-கடலூர் சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைக்கும் பணி நடந்து வரும் காட்சி.

இடையார்பாளையம் பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

Published On 2024-12-05 09:35 IST   |   Update On 2024-12-05 09:35:00 IST
  • விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
  • இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

புதுச்சேரி:

தொடர் மழையால் சாத்தனுார் அணை நிரம்பியதாலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.

இதனால் கடலுார் தென்பெண்ணை யாற்றில் கடந்த 2-ந் தேதி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூரை சுற்றியுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.

அன்று மாலை கடலுார்-புதுச்சேரி சாலையும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

இதனால் வாகன ஓட் டிகள் கடலுார்-புதுச்சேரி இடையே கூடுதலாக 10 கி.மீ. பயணம் செய்தனர். நேற்று மதியம் கடலுார்-புதுச்சேரி சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடியத் தொடங்கியதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு கடலூர்-புதுச்சேரி இடையே நேரடி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பாலம் உள்வாங்கியது. இதனால், புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாலம் உள்வாங்கியதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டது.

கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு வரவேண்டும். அதுபோல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு செல்லும் வாகனங்கள் வில்லியனூர், அபிஷேக பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News