புதுச்சேரி

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: புதுச்சேரியில் வசித்து வந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு

Published On 2025-04-28 11:55 IST   |   Update On 2025-04-28 11:55:00 IST
  • விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
  • லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி:

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.

இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News