புதுச்சேரி நகரப்பகுதியில் 24-ந்தேதி முதல் ஏ.சி. எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்
- புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
- புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 'ஏசி' பஸ்களும் அடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
அரசு அதற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. டிக்கெட் வசூல் செய்யும் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்கின்றனர்.
இந்த 25 இ-பஸ்களின் சேவை வருகிற 24-ந் தேதி முதல் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.
அன்றே நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு 38 எலெக்ட்ரிக் ஆட்டோவும் வழங்கப்படவுள்ளது.