இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்: எடியூரப்பா

Published On 2022-06-08 03:01 GMT   |   Update On 2022-06-08 03:01 GMT
  • வாக்காளர்கள் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் ஆதரிக்கிறார்கள்.
  • கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கான பாதையில் எந்த இடையூறும் இருக்காது.
  • காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார்.

பெலகாவி:

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலை எனது தலைமையில் சந்திக்கும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டு தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொள்வோம். நாங்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த முயற்சி செய்வோம். அதன் மூலம் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்.

வாக்காளர்கள் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் ஆதரிக்கிறார்கள். அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கான பாதையில் எந்த இடையூறும் இருக்காது. இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன். எந்த நேரத்திலும் எப்போதும் கட்சிக்காக உழைக்க தயாராக உள்ளேன்.

அனைவரையும் அரவணைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உறுதி பூண்டுள்ளேன். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா குறித்து குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்பதால் அவர் விரக்தியில் அவ்வாறு பேசுகிறார்.

அவர் ஒழுங்கீனமாக பேசுவது சரியல்ல. காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா குறித்து குறைத்து பேசுவதை சித்தராமையா தனது வழக்கமாக கொண்டுள்ளார். அதனால் அவருக்கு எந்த பயனும் ஏற்படாது. அவ்வாறு பேசுவதின் மூலம் அவர் தான் வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சிறுமைப்படுத்துகிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்திய நிலையில் வயது மூப்பு காரணமாக எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News