இந்தியா

இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதி தேவையில்லை- யஷ்வந்த் சின்ஹா

Published On 2022-06-30 08:32 GMT   |   Update On 2022-06-30 09:58 GMT
  • இந்தியாவுக்கு திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.
  • மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும்.

திருவனந்தபுரம்:

இந்திய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா கேரளாவில் ஆதரவு திரட்டினார்.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசிய யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதி தேவையில்லை. திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.

பாரதிய ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர், பிரதமருக்கு பின்னால்தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் மன்மோகன்சிங் காலத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதிபா பாட்டீல் மனு தாக்கல் செய்தபோது மன்மோகன் சிங் வேட்பாளருக்கு பின்னால் நின்றிருந்தார்.

இந்த தேர்தலில் எனக்கு போதுமான வாக்குகள் கிடைக்காது என்று கூறுகிறார்கள். எப்போதும் எண்ணிக்கை கைகொடுக்காது. தேர்தலின்போது எனக்கு போதுமான ஆதரவு கிடைக்கும். என்னை ஆதரிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போதைய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குறிப்பிட்ட சிலரே பயன் அடைந்தனர். அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி விட்டனர்.

இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இது இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மோசடியாகும்.

மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடுகளுடன் விளையாடுவது ஆபத்தானது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இதுபோன்ற திட்டங்கள் தீர்வாகாது.

எதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு அலுவலகங்களை ஆளும் கட்சி பயன்படுத்துகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளே இதற்கு உதாரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News