இந்தியா

கை மாற்று அறுவை சிகிச்சை செய்த சிறுமி.. தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்

Published On 2025-08-09 12:52 IST   |   Update On 2025-08-09 12:52:00 IST
  • ரியா மிஸ்திரியின் கை, அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
  • ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார்.

ரக்ஷா பந்தன் தினமான இன்று உருக்கமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசிக்கும் 16 வயது அனம்தா அகமது, தனது கை மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்த ரியா மிஸ்திரி என்பவரின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு தனது கைகளால் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு, 9 வயது சிறுமி ரியா மிஸ்திரி மூளைச்சாவு அடைந்தபோது, அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்தனர். அதன்படி, ரியாவின் கை அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

அனம்தாவின் வலது கை, 2022-ல் மின்சாரம் தாக்கியதால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனம்தா தனது குடும்பத்துடன் ரியா குடும்பத்தினர் வசிக்கும் வல்சாத் நகருக்குச் சென்றார்.

அங்கு, ரியா குடும்பத்தினரைச் சந்தித்த அனம்தா, ரியாவின் அண்ணன் ஷிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி, அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார். தனது சகோதரி ரியாவின் கையை கொண்ட அனம்தா தனக்கு ராக்கி கட்டி விட்டபோது 14 வயது சிறுவன் ஷிவம் ஆனந்த கண்ணீர் விட்டான்.

மதங்களை கடந்து ஏற்பட்ட இந்த பிணைப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவையும் தானமாக வழங்கப்பட்டு, எட்டு பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News