விஷத்தை சுவாசிக்கும் மக்கள்?.. டெல்லி 'காற்று மாசு'க்கு முக்கிய காரணம் என்ன? - ஆய்வு முடிவுகள் கூறுவது இதுதான்
- 2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
- டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன.
நாட்டின் தலைநகரமான டெல்லி உலகின் மிகவும் காற்று மாசு கொண்ட நகரங்களில் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் கடைசி மாதங்களில் குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமடைகிறது.
இதனால் சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட மோசமான உடல்நலப் பிரச்சனைகளை டெல்லி மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு காற்று விஷமாக மாறும் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது.
2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி 130 ஆக இருந்த டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் 428 என்ற அபாயகரமான நிலையை எட்டியது.
இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகம் என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. அடுத்த வாரத்திலும் இந்த நிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதில் இருந்து வரும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இதை நிராகரிக்கிறது. அதாவது டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமே தவிர அதுவே முக்கிய காரணம் கிடையாது.
மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் டெல்லிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபரில் பயிர்க் கழிவு தீ வைப்பால் டெல்லி காற்றுக்கு 2.62 சதவீத பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.
அந்த சமயம் டெல்லி காற்று தரக் குறியீடு 250 என்ற அளவிலேயே இருந்தது. இந்த நவம்பர் 12 டெல்லி காற்று தரக் குறியீடு 418 என்ற 'மிகவும் அபாய' நிலையை எட்டிய நிலையில் இதில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்கு 22.47 சதவீதம் மட்டுமே ஆகும்.
நவம்பர் 3 ஆம் வாரத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது குறைந்த போதும் டெல்லி காற்று மாசு குறையவில்லை.
நவம்பர் 18 முதல் 20 வரை டெல்லி காற்று மாசில் பயிர்த் கழிவுகள் எரிப்பதன் பங்கு 5.4 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை குறைந்தபோதிலும் டெல்லி காற்று தரக் குறியீடு 325-க்கு மேலேயே நீடித்தது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணிதான் என்றபோதிலும் முக்கிய காரணம் அல்ல என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
மாறாக டெல்லிக்கு காற்று மாசுக்கு காரணமாக மத்திய புவி அறிவியல் துறை குறிப்பிடும் தரவுகளில், டெல்லி காற்று மாசுக்கு சுற்றுப்புற நகரங்களாக கவுதம் புத்தா நகர், குர்கான், கர்னால், மீரட் உள்ளிட்ட டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களின் பங்களிப்பு 29.5 சதவீதம் ஆகும்.
டெல்லி போக்குவரத்தில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, காற்று மாசுக்கு 19.7 சதவீதம் பங்களிக்கிறது.
காற்று மாசுக்கு குடியிருப்புகளின் பங்களிப்பு 4.8 சதவீதம் ஆகவும், புறத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 3.7 சதவீதம் ஆகவும், மற்றும் கட்டுமானப் தூசு 2.9 சதவீதம் ஆகவும் உள்ளன.
மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் டெல்லி காற்று மாசுக்கு, காரணமே அறியப்படாத, அடையாளம் காணப்படாத காரணிகளின் பங்களிப்பு 34.8 சதவீதம் உள்ளது.
இந்த மூலங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், மாசைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அவை என்னவென்றே தெரியாமல் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன்மூலம் டெல்லி காற்று மாசுக்கு பல காரணிகள் கூட்டுப் பங்களிப்பை செய்கின்றன. மேலும் டெல்லியின் புவியியலும் காற்று மாசு அதிகளவில் காணப்பட முக்கிய காரணமாகவும்.
டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன. இதனால் குளிர்காலத்தில் தூய காற்று நுழைவதை இந்த இரு அரண்கள் தடுக்கிறது.
எனவே டெல்லியில் மாசுபாடு காற்றில் தேக்க நிலையை அடைந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு தரம் குறைவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தூய காற்றை சுவாசிப்பது மக்களின் உரிமையாகும். இந்த பிரச்சனைக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒருமித்த கருத்துடன் தீர்வை நோக்கிய வியூகத்தை வகுத்து செயல்படுவதே முழுமுதற் தீர்வாகவும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகும்.