இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்- நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா
- மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சாகர் பந்து" தொடங்குகிறது. தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130 J விமானம் கொழும்பில் தரையிறங்கியது" என்று கூறியுள்ளார்.