இந்தியா

பேஸ்புக் நேரலையில் பேசிய பெண்ணை கடுமையாக தாக்கிய கணவன்: இருவரையும் கைது செய்த போலீசார்..!

Published On 2025-09-11 15:56 IST   |   Update On 2025-09-11 16:09:00 IST
  • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை அதிகாரிகள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
  • இதை எதிர்த்து பெண் ஒருவர் நேரலையில் பேசியபோது, கணவன் இடைமறித்தபோது சண்டை ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மெகராஜ் மாலிக். இவர் தோடா பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இவர் ஆவார்.

இவரை அதிகாரிகள் பொது ஒழுங்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய செயலில் ஈடுபட்டதாக கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இதனால் தோடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போன்ற தடையை தோடாவில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வின் கைதுக்கு எதிராக பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவரது கணவர், அதை கண்டு உடனடியாக லைவ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவர் நிறுத்தவில்லை. இதனால் கணவர் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இருந்தபோதிலும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அந்த பெண் தொடர்ந்து பேசியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை லைவ் நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலான நிலையில், கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை தடை உத்தரவை மீறியதற்காகவும், லைவ் நிகழ்ச்சியின்போது மனைவி தாக்கியதற்காக கணவனையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News