தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது: 4 குழந்தைகளை கொடூரமாக கொன்ற சைக்கோ பெண்
- சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
- எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.
சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.
இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.
உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.
தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.
அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.