இந்தியா

புதிய உள்கட்டமைப்பு திட்டங்களால் ஆந்திர கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-11-12 06:58 GMT   |   Update On 2022-11-12 06:58 GMT
  • இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது.
  • பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் அமைகிறது

விசாகப்பட்டினம்:

தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசரண், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மாநில அமைசச்க்ள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது. நமது வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன.

இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திராவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இணைப்பை மேம்படுத்தும். இந்த புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும். உலக நாடுகளின் விருப்பத்தேர்வின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் கதி சக்தி போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக அந்நிய முதலீடுகளை கொண்டு வந்துள்ளன. கதி சக்தி திட்டமானது, உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியது மட்டுமின்றி, செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளது.' என்றார்.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ஆந்திர பகுதியில் 100 கிமீ நீளத்திற்கு அமைய உள்ளது. 

Tags:    

Similar News