இந்தியா

குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி

Published On 2025-08-07 21:58 IST   |   Update On 2025-08-08 13:36:00 IST
  • கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
  • அவர்களுக்கு உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் புள்ளிவிவரங்களுடன் அவர் இதை விளக்கினார். மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுலுக்கு கடிதம் அனுப்பிய கர்நாடக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ உறுதிமொழி  தரும்படியும் கேட்டு கடிதம் எழுதினார். மகாராஷ்டிரா தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதினார்.

இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்று கடிதத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் பதிலளித்துள்ளார். அதாவது, 'நான் காட்டியவை எங்களுடைய தரவுகள் அல்ல, தேர்தல் ஆணையத்தின் தரவுகள். சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த தரவுகளை அவர்கள் மறுக்காமல், என்னிடம் உறுதிமொழி கேட்கின்றனர்.

தவறு என்றால் தவறு என சொல்ல வேண்டியதுதானே. அவர்களுக்கு உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News