இந்தியா

ஆலப்புழா ரெயிலுக்கு தீ வைத்த சம்பவத்தில் மேற்கு வங்க தொழிலாளி கைது

Published On 2023-06-02 08:23 GMT   |   Update On 2023-06-02 08:23 GMT
  • ரெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது மத்திய உளவு துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • அரசின் திறமையின்மை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தின் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். என்றாலும் ரெயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுதொடர்பாக கேரள ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் ரெயில் பெட்டியின் அருகே கேன்களுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இது தொடர்பான கண்காணிப்பு காட்சிகளை பார்த்த போது, ஒரு கும்பல் தீ வைப்பில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய், ரெயில்நிலைய யார்டில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் யார்டுக்கு வந்தது.

இதற்கிடையே தீப்பிடித்து எரிந்த ரெயில் பெட்டியில் கைரேகை நிபுணர்கள் நடத்திய சோதனையில் 10 கைரேகைகள் சிக்கியது. அதனை போலீஸ் ஆவண காப்பகத்தில் இருந்த கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றவாளியை அடையாளம் காணும்பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் கண்ணூர் ரெயில் நிலையப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு குப்பைகளை எரித்ததாக வடமாநில தொழிலாளி ஒருவரை ரெயில்வே போலீசார் பிடித்தனர். அந்த நபரின் கைரேகையுடன், தீ பிடித்த ரெயில் பெட்டியில் கிடைத்த கைரேகையை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதில் 4 கைரேகைகள் அந்த நபரின் கைரேகையுடன் ஒத்து போனது. இதையடுத்து போலீசார் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு அந்த நபர் பிடிப்பட்டார்.

அந்த நபரின் பெயர் புஷன்ஜித் சித்கர் (வயது 40). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் போலீசாரிடம் கூறும்போது, ரெயில் நிலைய பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகவும், தனக்கு வேறுஎதுவும் தெரியாது என்றும் கூறினார். என்றாலும் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான புஷன்ஜித் சித்கர், ரெயில் நிலைய பகுதியில் சுற்றி திரிந்தது ஏன்? அவரது கைரேகை தீப்பிடித்த ரெயில் பெட்டியில் இருந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீஸ் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.

கண்ணூரில் நேற்று தீப்பிடித்து எரிந்த ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2 -ந் தேதி டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற நபர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இப்போது அதே ரெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது மத்திய உளவு துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தீப்பிடித்து எரிந்த ரெயிலின் அருகில் தான் பெட்ரோல் சேமிப்பு நிலையமும், பெட்ரோல் ஏற்றிய டேங்கர் வேகனும் நின்றிருந்தது. அந்த பகுதிக்கு தீ பரவும் முன்பு அணைக்கப்பட்டதால் அங்கு நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே நேற்று நடந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.

கண்ணூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த சம்பவத்திற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய உளவு துறையின் நடவடிக்கை காரணமாகவே கேரளாவில் பெரும் விபத்துக்களும், அசம்பாவிதங்களும் தடுக்கப்பட்டு வருகிறது. இல்லையேல் கேரள மக்கள் தினமும் விபரீதங்களை சந்திக்க வேண்டியதிருக்கும், இதற்கு மாநில அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டியது.

இதுபோல கேரள காங்கிரஸ் கட்சியும், ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசை குற்றம் சாட்டியுள்ளது. அரசின் திறமையின்மை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News