இந்தியா

பாஜகவில் சேரும் நீதிபதியின் தீர்ப்புகளை இனி யார் நம்புவார்: பிரசாந்த் பூஷன் விமர்சனம்

Published On 2024-03-05 11:22 GMT   |   Update On 2024-03-05 11:32 GMT
  • நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.
  • திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்?

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை இன்று ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய், வரும் 7-ம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.

வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தேசிய கட்சி பாஜக தான். அதனால் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி நான் பாஜகவில் சேர இருக்கிறேன். இதற்காக நான் நீண்ட நாட்கள் யோசிக்கவில்லை. சுமார் 7 நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இப்போது பாஜகவில் சேர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில், "திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்? நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை இவர் கேவலப்படுத்தி இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

"உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகி, ஒரு அரசியல் கட்சியில் சேர்கிறார்கள் எனில், அவர்கள் அதுவரை நீதி வழங்காமல் அக்கட்சிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றே அர்த்தம்" என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News