இந்தியா

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி: ராகுல்காந்தியின் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது

Published On 2025-08-31 17:33 IST   |   Update On 2025-08-31 17:33:00 IST
  • பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
  • ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.

வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.

இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News