இந்தியா

40 வயதை கடந்த ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மீண்டும் விருப்ப ஓய்வு திட்டம்

Published On 2023-03-18 02:54 GMT   |   Update On 2023-03-18 02:54 GMT
  • கிளார்க் போன்ற பொதுப்பிரிவு ஊழியர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஏர் இந்தியாவில் விமானிகள் உள்பட சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

புதுடெல்லி :

பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியிருந்த மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரியில் வாங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை ஏர் இந்தியா வெளியிட்டது. இதில் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கு சுமார் 4,200 ஊழியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக கருதப்பட்ட நிலையில், சுமார் 1,500 ஊழியர்கள் இதை ஏற்று விருப்ப ஓய்வு பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இதில் கிளார்க் போன்ற பொதுப்பிரிவு ஊழியர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி 40 மற்றும் அதற்கு மேல் வயதுடைய ஊழியர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருந்தால் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். அந்தவகையில் சுமார் 2,100 ஊழியர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

இதற்காக 17-ந்தேதி (நேற்று) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இதில் விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகவும் வழங்கப்படும். அதேநேரம் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவில் விமானிகள் உள்பட சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை வளர்ச்சியின் பாதையில் செலுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News