இந்தியா

தெலுங்கானாவில் விமானத்தில் பறந்த கிராம மக்கள்- 500 பேரின் ஆசையை நிறைவேற்றிய ருசிகரம்

Published On 2025-10-26 09:47 IST   |   Update On 2025-10-26 09:47:00 IST
  • கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.
  • சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

கிராமத்தில் யாராவது விமானத்தில் பயணம் செய்தால், முழு கிராமமும் அதைப் பற்றி விவாதிக்கும். தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து அசத்தி உள்ளனர்.

நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், குட்லனர்வா கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் நேற்று இரவு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் குதூகலமாக பயணம் செய்தனர்.

மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகராட்சியின் முன்னாள் மேயரான மேகலா காவ்யாவின் தந்தை மேகலா அய்யப்பா, இவர் தனது சொந்த கிராம மக்களுக்கு மறக்கமுடியாத ஒன்றைச் செய்ய விரும்பினார்.

கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, அவர் சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

தனது சொந்த கிராம மக்கள் 500 பேரை 2 விமானங்களில் கோவாவுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிகழ்வில் பேசிய காவ்யா, தனது தந்தை ஒரு எளிய விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ந்தார்.

அவருடைய கிராம மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காண கோவாவில் மகன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தார். அனைத்து கிராம மக்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். கிராம மக்கள் 500 பேரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

தெலுங்கானாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News