VIDEO: பஹல்காம் தாக்குதல் மத்திய அரசின் தோல்வியா?.. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை தாக்கிய பாஜக தொண்டர்கள்
- ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர்
- பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் பாஜக நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்டவர் டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் பாஜக எம்எல்ஏக்கள் தேவிந்தர் மான்யால், ராஜீவ் ஜஸ்ரோதியா, பாரத் பூஷன் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாவில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர், எல்லை தாண்டி ஊடுருவலைத் தடுக்க புலானாய்வுத் துறை, மத்திய அரசு தோல்வி அடைந்ததன் பிரதிபலிப்பாக பயங்கரவாதத் தாக்குதல் உள்ளதா? என்று பாஜக எம்எல்ஏக்களிடம் கேட்டனர். இதனால் அவர்கள் கோபமடைந்தனர்.
இதற்கிடையில், ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர். போலீசார் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை அடி தொடர்ந்தது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கதுவாவில் உள்ள ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.