இந்தியா

எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

Published On 2022-10-06 12:21 GMT   |   Update On 2022-10-06 12:21 GMT
  • தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து என்ஜினில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்தனர்
  • கால்நடைகளை தண்டவாளத்திற்கு அருகில் விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

அகமதாபாத்:

மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன. எருமை மாடுகள் மீது ரெயில் மோதியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். எருமை மாடுகள் மீது மோதியதில் ரெயில் எஞ்சினின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. அதை அதிகாரிகள் சரி செய்தனர்.

உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரெயில் மோதியதில் 3-4 எருமை மாடுகள் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது. இறந்த மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்திய பிறகு ரெயில் மெதுவாக புறப்பட்டுச் சென்று காந்தி நகர் ரெயில் நிலையத்தை அடைந்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, கால்நடைகளை தண்டவாளத்திற்கு அருகில் விட வேண்டாம் என, அருகிலுள்ள கிராம மக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது

Tags:    

Similar News