இந்தியா

'பேஸ்புக்' தோழியுடன் ஆபாசமாக 'வீடியோசாட்' செய்த அமெரிக்க பேராசிரியரை மிரட்டி ரூ.39 லட்சம் பறிப்பு

Published On 2022-12-03 02:13 GMT   |   Update On 2022-12-03 02:13 GMT
  • அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
  • டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.

புதுடெல்லி :

அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).

இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.

இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.

இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.

இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.

இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.

ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.

அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.

அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News