கேரளாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: சோபா சுரேந்திரன் நம்பிக்கை
- வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
- கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுடன் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், கேரளாவில் பாஜக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என பாஜக தலைவர் சோபா சுரேந்திரன் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்று கருதுவதால், வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கம் பெரும் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் அதே வேகத்தை நிர்வாகத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டது. கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பா.ஜ.க. கட்சி தலைமைச் செயலகத்தில் நுழைய மக்கள் தயாராகிவிட்டனர். அது நடந்தால், மாநிலத்தில் என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்.
மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பெறும் ஆதாயங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுவோம். கேரளாவில் என்டிஏ அரசாங்கத்தை அமைப்பதும், அம்மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவதும் பாஜகவின் நோக்கமாகும்.
இவ்வாறு சோபா சுரேந்திரன் தெரிவித்தார்.