இந்தியா

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி 15 கி.மீ தூரத்திற்கு அசைவ உணவுகளுக்குத் தடை.. ஆன்லைன் டெலிவரிக்கும் தடை

Published On 2026-01-10 15:45 IST   |   Update On 2026-01-10 15:45:00 IST
  • உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க இந்த நடவடிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகதிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே அயோத்தியின் பஞ்சகோசி மற்றும் கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.

மேலும், ராமர் கோயிலை மையமாக வைத்து 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்யக் கூடாது என்று ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது மக்களின் தனிமனித உணவு உரிமையில் தலையிடும் செயல் என்றும், உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

Tags:    

Similar News