இந்தியா

சோம்நாத் கோவிலில் டிரோன் நிகழ்ச்சியை கண்டு களித்தார் பிரதமர் மோடி

Published On 2026-01-10 22:29 IST   |   Update On 2026-01-10 22:29:00 IST
  • சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நடந்து வருகிறது.
  • வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் இந்தத் திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் சுயமரியாதை திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு சோம்நாத் கோவிலுக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

இரவு 8 மணியளவில் கோவிலில் நடைபெற்ற தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் சோமநாதர் கோவிலில் நடைபெறும் டிரோன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.


நாளை நடைபெற உள்ள சவுரிய யாத்திரை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் யாத்திரையில் 108 குதிரைகளின் அடையாள ஊர்வலம் இடம்பெறுகிறது. அதன்பின், சோமநாதர் நகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்துகொள்கிறார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சோமநாதர் சுயமரியாதை விழா நமது ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது நாடு முழுவதும் முழுமையான பக்தி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சோம்நாத் சுய மரியாதை திருவிழா, தனது கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பாரதத் தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவு கூரும் தருணமாகும். காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தபோதும், நெறிமுறைகளுக்கான அவா்களின் உறுதிப்பாட்டை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. இந்திய நாகரிக மீட்சியின் கொண்டாட்டம் இது.

கடந்த 1951-ல் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2001-ல் கோவிலின் 50-ம் ஆண்டு விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் பங்கேற்றுச் சிறப்பித்தனா். நடப்பாண்டில் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News