இந்தியா

பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்: 2வது கட்டமாக நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வருகை

Published On 2025-02-16 03:02 IST   |   Update On 2025-02-16 03:02:00 IST
  • முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
  • அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

சண்டிகர்:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.

அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

இவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒருவர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவிய இவர்களது பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

Tags:    

Similar News