இந்தியா

25% வரி விதித்த அமெரிக்கா.. இந்தியாவின் நடவடிக்கை என்ன? - மக்களவையில் பியூஷ் கோயல் விளக்கம்!

Published On 2025-07-31 17:24 IST   |   Update On 2025-07-31 17:25:00 IST
  • ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

மேலும் ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, "சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், தொழில்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைத் துறையின் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.

நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பியூஷ் கோயல் கூறினார்.  

Tags:    

Similar News