இந்தியா

அமெரிக்கா - எகிப்து இணைந்து நடத்தும் காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

Published On 2025-10-12 17:16 IST   |   Update On 2025-10-12 23:51:00 IST
  • அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
  • 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.

இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி  மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.

இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Tags:    

Similar News