மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ISI அமைப்பால் ஆபத்து - பாதுகாப்பு அதிகரிப்பு
- அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.