இந்தியா

மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

Published On 2023-05-12 01:39 IST   |   Update On 2023-05-12 01:39:00 IST
  • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • அவர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார்.

புதுடெல்லி:

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசத்துக்கு முதலில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்பின் மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சுவீடன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இந்தப் பயணத்தில் ஐரோப்பிய யூனியனின் இந்தோ-பசிபிக் மந்திரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் அவர் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார். சுவீடனில் முக்கிய தலைவர்கள் மற்றும் மந்திரிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்திய முத்தரப்பு மாநாட்டில் (இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) சுவீடன் வெளியுறவு மந்திரியுடன் சேர்ந்து அவரும் பங்கேற்க உள்ளார். இதன்பின் பெல்ஜிய நாட்டு பயணத்தில், பிரஸ்செல்ஸ் நகரில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். அதனுடன், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கான முதல் மந்திரிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டம் வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News