இந்தியா

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி: பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2025-12-11 00:43 IST   |   Update On 2025-12-11 01:37:00 IST
  • இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
  • தீபாவளியை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என்றார்.

புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டையில் அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையோன குழுவின் 20வது அமர்வு கடந்த 8ம் தேதி துவங்கியது.

இந்தக் கூட்டத்தில் 78 நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பரிந்துரைகளை ஆய்வுசெய்த ஐ.நா. கலாசார நிறுவனம், தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக, மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தீபாவளி நமது கலாசாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News