இந்தியா

இந்துத்வா பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் - அமித்ஷாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

Published On 2025-12-12 08:01 IST   |   Update On 2025-12-12 08:01:00 IST
  • பாராளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது.
  • மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதில் மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி.க்களும் அடங்குவர்.

இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாக கூறினார்.

இதுபற்றி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் நடந்த 'வந்தே மாதரம்' விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஏன் 'வந்தே மாதர'த்தை நினைவுகூருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு 'வந்தே மாதரம்' மீதான காதல் ஒருநாள் மட்டும்தான்.

மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகிறது. இருப்பினும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஊழல் மந்திரிகளை பாதுகாக்கும் ஒரு "கவச பாதுகாப்பு" இலாகாவை முதல்-மந்திரி தொடங்கி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News