விபத்தில் பலியான தம்பதி குழந்தை.
சித்தூர் அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி, குழந்தை பலி
- பெங்களூரு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த பால் டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது.
- சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரிக்கு அடியில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நாகுல பலப்பாடு மண்டலம் முப்பல்ல கிராமத்தை சேர்ந்தவர் அசோக் பாபு (வயது 33). இவரது மனைவி மோனிகா (29), 3 மாத மகன் பிரபவ்.
அசோக் பாபு பெங்களூரு ஹோடி பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது மனைவி மகனுடன் காரில் சித்தூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். பெங்களூரு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சித்தூர் அடுத்த சீராளா கே பட்டினம் அருகே வந்தபோது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த பால் டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் டேங்கர் லாரிக்குள் புகுந்தது.
கார் நொறுங்கி அதிலிருந்த அசோக் பாபு அவரது மனைவி மோனிகா மகன் பிரபு ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரிக்கு அடியில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.
மேலும் காரில் இருந்த 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.