இந்தியா

வரலாற்றில் மூன்றாவது முறை: சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் அமர்வு விசாரணை

Published On 2022-12-02 02:06 GMT   |   Update On 2022-12-02 02:06 GMT
  • சுப்ரீம் கோர்ட்டில் முதலில் அனைத்து பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு 2013-ல் அமைக்கப்பட்டது.
  • தற்போது சுப்ரீம் கோர்ட்டில் 3 பெண் நீதிபதிகள் பணியில் உள்ளனர்.

புதுடெல்லி :

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக முற்றிலும் பெண் நீதிபதிகளைக் கொண்ட அமர்வினை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்தார்.

இது 2 பெண் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆகும்.

இந்த அமர்வில், நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் 11-வது எண் கோர்ட்டில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

இந்த அமர்வுக்கு 32 மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. திருமண பிரச்சினைகள் தொடர்பான இடமாற்ற மனுக்கள் மற்றும் ஜாமீன் மனுக்கள் என வகைக்கு 10 மனுக்கள் ஒதுக்கப்பட்டன.

நேற்று இரு நீதிபதிகளும் விசாரணை நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட்டில் முதலில் அனைத்து பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு 2013-ல் அமைக்கப்பட்டது. அப்போது அந்த அமர்வில் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இரண்டாவதாக 2018-ல் அமைக்கப்பட்ட பெண்கள் அமர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதியும், இந்திரா பானர்ஜியும் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டில் 3 பெண் நீதிபதிகள் பணியில் உள்ளனர். அவர்கள் ஹிமா கோலி, பேலா எம் திரிவேதி மற்றும் நாகரத்தினா ஆவார்கள். இவர்களில் நாகரத்தினா, 2027-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆவார். அப்போது அவர் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெயரை பெறுவார்.

Tags:    

Similar News