நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
- அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர்.
- இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமர்த்தியா சென்னின் வாக்காளர் விவரங்களில் வயது உள்ளிட்டவற்றில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி பீர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர்த்தியா சென் போன்ற புகழ்பெற்ற ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று சாடியுள்ளது.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்த்தியா சென் நிலைப்பாடு:
பாஜகவின் கொள்கை 'இந்து ராஷிடிரா' இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதாகவும் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது நாட்டின் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்
விசாரணையின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையை நினைவூட்டுகிறது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அரசு தலையிட்டு இந்துத்துவா சித்தாந்தத்தைத் திணிக்கிறது, பாஜக அரசு வணிகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை, ஏழை மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்திற்குத் தருவதில்லை எனவும் அமர்த்தியா சென் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்திருந்தார்.
.