இந்தியா

தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம்: சாலையில் டயர்களுக்கு தீ வைப்பு- ஆந்திராவில் பதட்டம்

Published On 2023-09-09 09:13 IST   |   Update On 2023-09-09 14:21:00 IST
  • ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் கைது செய்தனர்
  • திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம்

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் உள்ள அவரது கட்சி முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கோதாவரி மாவட்டம் பொடலடாவில் இருந்து தனது தந்தையை சந்திக்க காரில் புறப்பட்டார்.

அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி லட்சுமி புரத்தில் சாலையில் டயர் மரக்கட்டைகளை போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் நகரில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அமராவதி, விஜயவாடா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தீ வைப்பு, கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.

இதனால் பெரும் பதட்டம் நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

தொடர் போராட்டத்தால் ஆந்திராவில் கடும் பதட்டம் நிலவியது.

Tags:    

Similar News