இந்தியா

இடஒதுக்கீடு: நாட்டின் முதல் மாநிலமாக எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்திய தெலுங்கானா

Published On 2025-04-14 16:31 IST   |   Update On 2025-04-14 16:32:00 IST
  • தெலுங்கானாவில் எஸ்.சி. பிரிவில் 59 சமூகத்தினர் உள்ளனர்.
  • 59 சமூகத்தினரை மூன்று பிரிவுகளாக பிரித்து இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு பெறும் வகையில் எஸ்.சி. சமூகத்தினரை மூன்றாக வகைப்படுத்தி தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்திய முதல் மாநிலமாகியுள்ளது தெலுங்கானா.

எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்த தெலுங்கானா அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஷானீம் அக்தர் தலைமையில் ஆணையத்தை நியமனம் செய்தது. இந்த ஆணையம் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் 59 எஸ்.சி. சமூகத்தினரை குரூப் 1, 2, 3 என மூன்று வகையாக பிரித்தது.

எஸ்.சி. பிரிவினருக்கு வேலை மற்றும் கல்வியில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 15 சதவீதம் இவர்களுக்கு பிரித்து அளிக்கக்கூடிய வகையில் இந்த ஆணையம் அறிக்கை தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்தது.

இதனடிப்பையில் தெலுங்கானா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த சட்டத்திற்கு கடந்த 8ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதனடிப்படையில் இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 1-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 15 சமூகத்தினருக்கு ஒரு சதவீதம் வழங்கப்படும். குரூப் 2-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 18 சமூகத்தினருக்கு 9 சதவீதம் வழங்கப்படும். குரூப் 3-ல் 26 சமூகத்தினருக்கு 5 சதவீதம் வழங்கப்படும்.

Tags:    

Similar News