இந்தியா

சிவாஜி சிலை அவமதிப்பால் பதற்றம்.. தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தடுப்பு காவலில் வைத்தது போலீஸ்

Published On 2023-07-05 16:22 GMT   |   Update On 2023-07-05 16:22 GMT
  • ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக சென்றபோது தன்னை கைது செய்ததாக எம்எல்ஏ தெரிவித்தார்.
  • இரு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமூகத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். பதற்றம் அதிகரித்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் இன்று கஜ்வேல் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அல்வால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக கஜ்வேல் சென்றபோது தன்னை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஜ்வேலில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இரு குழுக்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

Tags:    

Similar News