தேஜஸ் போர் விமான விபத்து: உயிரிழந்த விமானியின் அடையாளம் வெளியீடு - இமாச்சலப் பிரதேச முதல்வர் இரங்கல்
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.