இந்தியா

அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும்: ராகுல் காந்தி

Published On 2025-04-03 15:34 IST   |   Update On 2025-04-03 15:34:00 IST
  • ஒரு பக்கம் சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
  • மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சிகள் இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் என்ன? இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (Zero Hour) ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. நம்முடைய வெளியுறவுத்துறை செயலாளர் (விக்ரம் மிஸ்ரி) சீனா தூதரக அதிகாரியுடன் கேக் வெட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

கேள்வி என்னவென்றால்- சீனா கைப்பற்றிய 4,000 ச.கி.மீ. நிலப் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பதுதான். நம் நிலத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் சீனாவுக்கு கடிதம் எழுதியிருப்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

நம்முடைய மக்களிடம் இருந்து இந்த தகவலை நாங்கள் பெறவில்லை. சீனா தூதர் இந்திய மக்களிடம், உங்கள் ஜனாதிபதி, பிரதமர் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதன்மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு பக்கம் நாம் சீனாவுக்கு 4 ஆயிரம் ச.கி.மீ. நிலத்தை கொடுத்துள்ளோம். மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும். குறிப்பாக வாகனம், மருந்து மற்றும் விவசாயத்துறைகளை பாதிப்படையும்.

சீனா கைப்பற்றியுள்ள நமது நிலத்தை பற்றியும், நமது நட்பு நாடு நம் மீது விதித்துள்ள பரஸ்பர வரி பற்றியும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News