இந்தியா

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் காலை சுற்றிய ராஜநாகம்- பிரார்த்தனைக்கு பின் விலகிய அதிசயம்

Published On 2023-08-29 17:28 IST   |   Update On 2023-08-29 17:28:00 IST
  • அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
  • ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் தஹரா கிராமம் மஹோபா பகுதியைச் சேர்ந்தவர் மித்லேஷ் யாதவ் எனும் பெண்மணி. அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் மித்லேஷ் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்குள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்ற அவர் தனி அறையில் படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்தார். அப்போது அவரது காலில் அதிக விஷத்தன்மை கொண்ட உலகிலேயே மிக நீளமான ராஜ நாகப்பாம்பு அவரது காலை சுற்றியிருந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் உறைந்தார். சத்தம் போட்டால் ராஜநாகம் தன்னை தீண்டி விடுமோ என்ற அச்சத்தில் மவுனமாக யோசித்தார். ஆனால் அப்போது வரை அந்த ராஜநாகம் அவரை எதுவும் செய்யாமல் காலை சுற்றி சுருண்ட நிலையிலேயே இருந்தது.

கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மித்லேஷ் யாதவ், இந்த பாம்பு தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் தானாகவே சென்றுவிட வேண்டும் என்று இறைவனிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தார். இதற்காக அவர் தொடர்ந்து 3 மணி நேரம் கண்களை மூடி வேண்டியபடியே இருந்தார்.

இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் மகள் எழுந்து வராததால் அவரது தாய் அவரை தேடி வந்தார். அப்போது மகளின் காலை பாம்பு சுற்றியிருந்ததும், மகள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் பாம்பு பிடிக்கும் நிபுணருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மித்லேஷ் யாதவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ராஜநாகத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் மித்லேஷ் யாதவின் காலை சுற்றியிருந்த ராஜநாகம் தானாகவே தனது பிடியை தளர்த்தியது.

இது அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து மெதுவாக யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தாமல் ஒரு புதருக்குள் சென்று மறைந்தது. உடனே மித்லேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதுகுறித்து மித்லேஷ் யாதவ் கூறியதாவது:-

நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் விழித்தபோது, என் காலில் பாம்பு சுற்றியிருந்தது. என்னிடம் வந்த என் தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். அது வெளியேறும் வரை பல மணி நேரம் காத்திருந்தேன்.

சுமார் 3 மணி நேரமாக பாம்புகளை தன்னுடைய தலையைில் சுமந்திருக்கும் இந்து கடவுளான சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். எல்லா நேரமும் நான் போலேநாத்திடம் (சிவபெருமான்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவர் எனக்கு பல்வேறு கட்டங்களில் அருள் புரிந்ததை போன்று என்னை விட்டு அந்த பாம்பு வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.

ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். என் குழந்தைகளைப் பற்றியும், நான் இறந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் நினைத்தேன். தொடர்ந்து 3 மணி நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எனது நலனுக்காக எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அவர் பிரமிப்புடன் கூறினார்.

பாம்பு பிடிக்கும் நிபுணர் வருவதற்குள் அந்த ராஜநாக பாம்பு யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டிற்கு வெளியே சென்றதால் மித்லேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News