இந்தியா

தெலுங்கானா அரசியலில் பரபரப்பு: நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகினார்

Published On 2023-11-16 04:01 GMT   |   Update On 2023-11-16 04:01 GMT
  • 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராக விஜயசாந்தி பணியாற்றினார்.
  • தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

திருப்பதி:

நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று விலகினார்.

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார். தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த் மற்றும் மற்றொரு தலைவர் எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர்.

இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.

தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமான விஜயசாந்தி, 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.

தெலுங்கானாவுக்கு தனி மாநிலம் கோரி போராடுவதற்காக, 2005-ல் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெலுங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் அவர் சந்திரசேகர ராவ் கட்சியில் இணைந்து 2009-ல் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

ஆகஸ்ட் 2013-ல், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, டி.ஆர்.எஸ். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விஜயசாந்தியை இடைநீக்கம் செய்தது.

பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர், 2014 தேர்தலில் மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2020-ல் பா.ஜ.க.வுக்குத் திரும்பினார். தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.

விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Tags:    

Similar News