இந்தியா

கேரளாவில் நோரோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து 3 குழந்தைகளுக்கு ஷிகெல்லா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

Published On 2022-06-08 05:28 GMT   |   Update On 2022-06-08 05:28 GMT
  • கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
  • பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவின் ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

லேசான காய்ச்சல் மற்றும் வாந்தி, மயக்கம் இருப்போரை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பாலக்காடு மாவட்டம் லக்கிடி மற்றும் பேரூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி இருந்தது தெரியவந்தது.

மேலும் இப்பகுதியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 மாணவர்களுக்கும் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஷிகெல்லா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News