இந்தியா

பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள்- மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

Published On 2022-08-11 08:50 GMT   |   Update On 2022-08-11 08:50 GMT
  • நாட்டில் பணவீக்கம் அல்லது வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமரால் பார்க்க முடியவில்லையா?
  • பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள். நாட்டை தவறாக வழி நடத்தாதீர்கள்.

புதுடெல்லி:

விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 5-ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் கருப்பு சட்டை போராட்டத்தை பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். அந்த கட்சியின் பெயரை குறிப்பிடாமல் சாடினார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

சிலர் ஆகஸ்டு 5-ல் பில்லி, சூனிய மந்திரத்தை பயன்படுத்தினர். ஆனால் அது எடுபடவில்லை. தங்கள் விரக்தியை போக்கி கொள்ள அவர்கள் கருப்பு சட்டை அணிந்தனர். ஆனால் பில்லி, சூனியம் மூட நம்பிக்கைகளால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு மோடி தெரிவித்து இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் பணவீக்கம் அல்லது வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமரால் பார்க்க முடியவில்லையா? பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள். நாட்டை தவறாக வழி நடத்தாதீர்கள்.

பிரச்சினைக்குரிய விஷயங்களில் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப்பட்டு இருக்கிறீர்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Tags:    

Similar News