இந்தியா

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Published On 2023-01-20 13:34 IST   |   Update On 2023-01-20 13:34:00 IST
  • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
  • பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் 3-வது கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மத்திய அரசின் கீழ் இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், தட்டச்சர், இளநிலை கணக்காளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருகிறார்கள்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News