இந்தியா

கேரளாவில் மோடி பிரசார தேதி மாற்றம்

Published On 2024-03-12 10:22 IST   |   Update On 2024-03-12 10:22:00 IST
  • பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
  • பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் மற்றும் ரோடு-ஷோ செல்லும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவனந்தபுரம்:

பாராளுமன்றத்துக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்கி விட்டன. கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது.

மீதமுள்ள வேட்பாளர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வருகிறார். அவர் வருகிற 15-ந்தேதியன்று பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளிலும், 17-ந்தேதியன்று பத்தினம்திட்டாவிலும் பிரசாரம் செய்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பிரதமரின் பிரசார தேதி மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் பிரதமர் மோடி திட்டமிட்டபடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் 15-ந்தேதி பத்தினம் திட்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்பு 19-ந்தேதியன்று பாலக்காட்டில் பிரசாரம் செய்கிறார். அவர் பாலக்காட்டில் அரசு மோயன் பள்ளி வளாகத்தில் இருந்து கோட்டை மைதானம் அஞ்சு விளக்கு பகுதி வரை ரோடு-ஷோ செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அவர் பேசும் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் மற்றும் ரோடு-ஷோ செல்லும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து கேரளாவுக்கு வந்து சென்ற படி இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் வர இருப்பது அம்மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News