இந்தியா

போலீசார் முன்னிலையில் உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட போது எடுத்தபடம்.

ரோட்டில் கிடந்த பணத்தை 6 மணி நேரம் போராடி உரியவரை கண்டுப்பிடித்து ஒப்படைத்த நபர்

Published On 2023-01-18 08:44 IST   |   Update On 2023-01-18 08:44:00 IST
  • மணிபர்சில் ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் ஆதார் கார்டு இருந்தது.
  • மணிபர்சில் இருந்து ஒரு சிம் கார்டு கிடைத்தது.

மும்பை

மும்பை வடலாவில் மொபைல் கடை நடத்தி வருபவர் யூசுப் (வயது51). இவர் சம்பவத்தன்று மதியம் 12 மணியளவில் ஆர்.ஏ.கே.மார்க் பகுதியில் உள்ள தெருவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரோட்டில் ஒரு மணிபர்ஸ் கிடந்தது. யூசுப் மணிபர்ச்சை எடுத்து அருகில் உள்ள மசூதிக்கு சென்றாா். அங்கு யாராவது மணிபர்சை தொலைத்தார்களா என்று விசாரித்தார். ஆனால் யாரும் மணிபர்சை உரிமைகோரி வரவில்லை.

யூசுப் மணிபர்சை திறந்து பார்த்தார். அதில் ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் ஆதார் கார்டு இருந்தது. யூசுப் அந்த ஆதார் கார்டுடன் அருகில் இருந்த ஆதார் சேவை மையத்துக்கு சென்றார். அங்கு ஆதார் உரிமையாளரின் முகவரி உத்தரபிரதேச மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் மணிபர்சில் இருந்து ஒரு சிம் கார்டு கிடைத்தது. அந்த சிம் கார்டுடன் யூசுப் டெலிகாம் நிறுவன சேவை மையத்துக்கு சென்றார். அப்போது அந்த சிம் கார்டு செயல்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நண்பர்கள் சிலர் மணிபர்சில் உள்ள பணத்தை விருந்து வைத்து கொண்டாடுமாறு தெரிவித்தனர். சிலர் ஏழைகளுக்கு தானமாக கொடுக்குமாறு அறிவுரை கூறினர். ஆனாலும் யூசுப் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பினார். பணத்தை தொலைத்தவர் எவ்வளவு கவலை அடைந்து இருப்பார் என யூசுப் வருத்தப்பட்டார்.

இந்தநிலையில் மணிபர்சில் தபால் வங்கி அட்டை இருந்தது. உடனடியாக யூசுப் அந்த அட்டையுடன் வடலா தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இருந்த ஊழியர்கள் உதவியுடன் தபால் வங்கி அட்டை பயனாளரின் செல்போன் எண் யூசுப்பிற்கு கிடைத்தது.

செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது பணத்தை தொலைத்தவர் ஓட்டல் ஊழியர் முஜீப் (21) என்பது தெரியவந்தது. முஜீப் அவரது ஒரு மாத சம்பவளத்தை சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்ப மணிபர்சில் வைத்து இருக்கிறார். அப்போது தான் அவர் மணிபர்சை தவறவிட்டு உள்ளார். யூசுப், முஜீப்பை ஆர்.ஏ.கே. மார்க் போலீஸ் நிலையத்துக்கு வர சொன்னார். அங்கு போலீசார் முன்னிலையில் முஜீப்பிடம் அவரது பணத்தை ஒப்படைத்தார்.

இதுபற்றி யூசுப் கூறுகையில், "பணத்தை தொலைத்தவரை கண்டுபிடிக்க எனக்கு 6 மணி நேரம் ஆனது. எனினும் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

ரோட்டில் கிடந்த பணத்தை கண்டெடுத்த யூசுப், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடத்திய போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Similar News