இந்தியா

மூணாறு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

Published On 2024-01-24 10:10 GMT   |   Update On 2024-01-24 10:10 GMT
  • திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
  • முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு குண்டு மலை அருகே தென்மலா பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. இங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பால்ராஜ் (வயது79) என்பவர் கலந்து கொண்டார்.

நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே காட்டு யானை புகுந்ததாக தெரிகிறது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி ஒலிக்கப்பட்டிருந்ததால் காட்டு யானை வருவதை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் காட்டுயானை வருவதை பால்ராஜ் பார்த்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் பால்ராஜை யானை தாக்கியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காட்டு யானை மிதித்து கொன்றது.

இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் பால்ராஜ் இறந்துகிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது. முதியவரை கொன்ற யானை அந்த பகுதியில் உள்ளதா? என்று வனத்துறையினர் தேடிப் பார்த்தனர். ஆனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News