இந்தியா

கோவில் திருவிழா: பட்டாசு விபத்தில் மேலும் ஒருவர் பலி- 4 பேர் கைது

Published On 2024-02-13 07:04 GMT   |   Update On 2024-02-13 07:04 GMT
  • சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது.
  • படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே உள்ள புதியகாவு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் கொண்டுவரப்பட்டன.

திருப்போனித்துரா அருகே உள்ள சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அதிலிருந்து பற்றிய தீ, பட்டாசுகளுடன் நின்ற வாகனத்துக்கும் பரவியது.

இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசுகள் ஏற்றி வந்த வாகனத்தை ஓட்டிவந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது28) பரிதாபமாக இறந்தார்.

படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் திவாகரன் (55) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பட்டாசு விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அனில்(49), மதுசூதனன்(60), ஆதர்ஷ்(29), ஆனந்தன்(69) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தேவசம் அதிகாரிகள் சதீஷ்குமார், சசிகுமார், ஒப்பந்த தொழிலாளர்கள் வினித், வினோத் ஆகிய 4 பேரை ஹில்பேலஸ் போலீசார் இன்று கைது செய்தனர்.

சஜேஷ்குமார், தேவசம் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சத்யம், ஒப்பந்ததாரர்கள் ஆதரஷ் உள்ளிட்ட சிலர் மீதும் 305, 308, 427, 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News