புதுமணப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை- போலீசில் சரணடைய சென்ற கணவன் விபத்தில் சிக்கி பலி
- தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
- மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அருண் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தீபா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். திருமணமான புதிதில் இப்படித்தான் இருக்கும் சிறிது நாள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவரது பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் அருணின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் விரத்தி அடைந்த தீபா தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தெரிவித்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகள் வீட்டிற்கு வந்த பெற்றோர் தீபாவை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 28-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்த அருண் மனைவியை இனிமேல் கொடுமை படுத்தாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.
இதனை உண்மை என நம்பிய அவரது பெற்றோர் தீபாவை கணவருடன் அனுப்பி வைத்தனர். தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அருண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்றார். வீட்டில் பைக் இல்லாததை கண்ட அருணின் தந்தை ஜெயவந்த் ராவ் அருணுக்கு போன் செய்தார். அப்போது அருண் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் போலீசில் சரணடைய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது ஜெயவந்த் ராவ் மகனை வீட்டிற்கு வருமாறு கூறினார்.
இதையடுத்து அருண் தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் அருண் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கணவன் மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்ய உதவியதாக அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.