இந்தியா

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி செலுத்துவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு: பண்ணையாளர்கள்-வியாபாரிகள் அறிவிப்பு

Published On 2023-08-15 09:50 GMT   |   Update On 2023-08-15 09:50 GMT
  • பிராய்லர் கோழி சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள்.
  • பிராய்லர் கோழி தொடர்பாக நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

திருவனந்தபுரம்:

பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கருத்தால் பிராய்லர் கோழி விற்பனை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. பிராய்லர் கோழி சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள்.

பிராய்லர் கோழியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உண்ணுவதன் மூலம் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த பிராய்லர் கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள், பிராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது என்பதை நிரூபித்தால், ரூ.25லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அசைவ பிரியர்கள் பிராய்லர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பிராய்லர் கோழி தொடர்பாக நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிராய்லர் கோழிகளில் வளர்ச்சி ஹார்மோன்கள் இருப்பதாக கூறுவது தவறானது. இதில் செரிவூட்டப்பட்ட தீவனம், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற காரணிகளே பங்களிக்கின்றன என்று பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் அதிகாரி ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News