ஆந்திராவில் வணிக வளாகத்தில் தீ- ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து சேதம்
- தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரா-ஒரிசா எல்லை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.
அதிகாலை வணிக வளாகம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென ஷாப்பிங் மால் முழுவதும் பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீயில் எரியக்கூடிய பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது கடைகளுக்கு தீ வைத்து எரித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.